டில்லி ஹவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் கண்டனம்

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கண்மூடித்தனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கையில் ஆயுதங்களை ஏந்தியபடி முகத்தை மூடிக்கொண்டு கல்வி நிறுவனத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் நிகழ்த்தியிருக்கிற வெறியாட்டம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

நாட்டின் தலைநகரில், புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திற்குள் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.