சென்னை: ஒரே ஒரு தொகுதி வெற்றிக்காக ‘வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளது எடப்பாடி அரசு என அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 6ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக பிப்ரவரி 26ந்தேதி அன்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு அன்றைய தினம் காலை வெளியானது. அதே வேளையில் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரும் நடைபெற்று வந்தது. தேர்தல் அறிவிப்பு அன்று பிற்பகல் வெளியாகும் என்ற நிலையில், அவசரம் அவசரமாக, வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த சட்டத்திருத்தத்துக்கு கவர்னரும் ஒப்புதல் வழங்கினார்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால்தான்,அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம் என  மிரட்டி , தனதுஆதரவாளர்களைக்கொண்டு போராட்டம் நடத்தி,  அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்த பாமகவிடம், அதிமுக அரசு பணிந்து விட்டதாக கூறப்பட்டது. மேலும், இதுபோல மேலும் சில ஜாதிய அமைப்புகளும் உள்ஒதுக்கீடு வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில்  அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.  இடஒதுக்கீடு என்பது தேர்தலுக்கான அறிவிப்பாக இருக்க கூடாது,  அது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டு சுமூகமாக பேசி நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியவர்,  இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் வகையில்  மாநில அரசு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிமுக அரசு அவ்வாறு செய்யாமல், ஓட்டுக்காக இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது.

அதுவும் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று விமர்சித்ததுடன், ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்க கூடாது; இடஒதுக்கீடு தேர்தலுக்கான அறிவிப்பாக இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.