சென்னை:

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், டிடிவி தினகரன் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தற்போதுவரை ஒரு அமைப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அதை அரசியல் கட்சியாக மாற்றும் முயச்சியில் ஈடுபட உள்ளார் டிடிவி தினகரன், அதன் முதல்படியாக, இதுவரை பொதுச்செயலாளராக இருந்து வந்த சசிகலா நீக்கப்பட்டு, துணைப்பொதுச்செயலாளராக இருந்து வந்த தன்னை, பொதுச்செயலாளராக தேர்வு செய்திருக்கிறார்.

தமிழகத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று அமமுக  ஆலோசனை கூட்டம் சென்னை அசோக்நகரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.  இதில், அமமுகவின் துணைப் பொதுச்செய லாளரான டிடிவி தினகரனை பொதுச்செயலாளராக நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர். மேலும் இதுவரை பொதுச்செயலாளராக இருந்து வந்த சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பிறகு தலைவராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்வதற்கான முயற்சியில் முதல்படியாக பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற்று உள்ளது.