சென்னை,

டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் செயல்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அதிமுக அம்மா கட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முதல்வருடன் ஆலோசனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

14ந்தேதி சட்டசபை கூடுவதை அடுத்து, முதல்வர் அமைச்சர்களை அழைத்து, அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம் நடைபெற்றது என்று கூறினார்.

மேலும்,  ஏப்ரல் 17ந்தேதி அன்று மின்துறை அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற எம்.பிக்கள், எம்எல்ஏக்ககள், அமைச்சர்கள் கலந்துகொண்ட  கூட்டத்தில், அனைவரும் ஒன்றுகூடி எடுத்த முடிவுபடி,  ஒருமித்த உணர்வோடு, எம்ஜிஆர் ஆரம்பித்த மாபெரும் இயக்கத்தை, அம்மா வழி நடத்திய இயக்கதை காக்க வேண்டும் என்றும்,

அம்மாவின் ஆட்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், கட்சியின் நலன், ஆட்சியின் நலன் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் விலக்கி வைத்து முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் டிடிவி தினகரன் மீண்டும்  கட்சி பணி தொடர்வார் என்று கூறியிருப்பதால், அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.

ஏற்கனவே ஏப்ரல் 17ந்தேதி டிடிவி தினகரன் அறிவித்தபடி கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்.

அதோடு அல்லாமல், தற்போது அவரது அறிவிப்பு குறித்து அமைச்சர் பெருமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, ஏற்கனவே நாங்கள் முடிவெடுத்தபடி தொடர்ந்து ஆட்சியை நடத்துவோம்.

அவர்கள் சார்ந்தவர்கள் தலையீடு இல்லாமல் ஆட்சி நடைபெறும். ஆகவே கழக சகோதரர்கள் யாரும் டிடிவி தினகரனை யாரும் நிச்சயமாக சந்திக்க மாட்டார்கள் என்று ஜெயக்குமார் கூறினார்.