சென்னை,

திமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக, எடப்பாடி அரசு கவிழும் சூழல் உருவாகி உள்ளது. தினகரனுக்கு இதுவரை 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி அரசு எந்த நேரத்திலும் கவிழும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு நேற்று தமிழக அமைச்சர்கள் அறிவித்த நிலையில், அதிமுக அரசு ஆட்டம் கண்டுள்ளது.

அதிமுக அம்மா அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு  ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுவரை 25 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஜெ. மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அதையடுத்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர்.

தற்போது அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, எடப்பாடி அரசுக்கு ஆதரவு கொடுத்து வரும் எம்எல்ஏக்களில் 25 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இவர்கள் திடீரென்று போர்க்கொடி உயர்த்தினால், ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்பதால், அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.

திகார் ஜெயிலில் இருந்து வெளியே வந்த தினகரன், மீண்டும் கட்சிபணியில் தீவிரமாக ஈடுபடப்போவதாக அறிவித்ததால், அதிமுக அம்மா அணியில் சலசலப்பு ஏற்பட்டது.

டிடிவி தினகரனுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஒன்று கூடி, தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்  குரல்கொடுத்தனர்.

தினகரனை நீக்க இவர்களுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனால் அ.தி.மு.க.வில் கட்சியிலும், ஆட்சியிலும் மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து தினகரனை அதிமுக அம்மா அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

இன்று காலை டி.டி.வி.தினகரனை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எல்.ஏ.க்கள் தூசி மோகன் (செய்யாறு), பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), பாப்புலர் முத்தையா (பரமக்குடி), ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு) ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜியும், பண்ருட்டி சத்யா பன்னீர் செல்வம், ஓட்டப்பிடாரம் சுந்தர்ராஜன், அம்பாசமுத்திரம் முருகை பாண்டியன் உள்பட 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

தொடர்ந்து மேலும் பல எம்.எல்..ஏக்கள் சந்திப்பார்கள் எனகூறப்படுகிறது.

வரும் 14ந்தேதி சட்டமன்ற கூட இருக்கும் நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பிரச்சினை ஏற்படுத்தினால், அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்துவிடும் என்பதால், தமிழக அரசியல் நிலவரம் பரபரப்பாக நகர்ந்து வருகிறது.