அதிமுக வீணாக போக டிடிவி தினகரன்தான் காரணம்! திவாகரன் குற்றச்சாட்டு

வேதாரண்யம்:

திமுக வீணாக போக டிடிவி தினகரன்தான் காரணம் என்றும், அவர் குட்டையை குழப்பி கட்சியை அதிமுகவை வீணடித்து விட்டார் என்று  சசிகலா சகோதரர் திவாகரன், சசிகலா அக்காள் மகனும், அமமுக கட்சியின் துணைப்பொதுச்செயலாளரானருமான  டிடிவி தினகரனை கடுமையாக சாடினார்.

ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா குடும்பத்தினர் முயற்சி செய்து வந்தனர்.  ஆனால், ஓபிஎஸ் எதிர்ப்பு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டதன் காரணமாக கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முடியாமல் போனது.

இதற்கிடையில் சசிகலா குடும்பத்திற்குள் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக, சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதே வேளையில் சசிகலா சகோதரர்  அண்ணா திராவிடர் கழகம் என்று ஒரு கட்சியை தொடங்கி அரசியல் செய்து வருகிறார்.

திவாகரன் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, எடப்பாடி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.  “தமிழகத்தில் நீட் தேர்வும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதை எதிர்த்து போராடும் விவசாயிகளை போலீஸார் கைது செய்கிறார்கள். இது அதிமுக அரசின் இரட்டை வேடத்தைதான் காட்டுகிறது என்று ழுகூறினார்.

எனவே,  ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக எந்தக் கட்சி தமிழகத்தில் போராட்டம் நடத்தினாலும் அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று கூறியவர்,   அதிமுகவும் அரசும் கட்டுக்கோப்பாக இருப்பதுபோலவே தெரியவில்லை என்றும்,  அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பத்திரிகைகளில் பேசிவருகிறார்கள். ஆனால், அதற்காக எந்தவிதமான ஆக்கபூர்வ முயற்சியை அவர்கள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்த போதும் அவர்கள் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை என்று தெரிவித்தவர்,  அதிமுக கட்சிக்குள் புகுந்து, அங்கு குட்டையை குழப்பி அந்தக் கட்சியை வீணடித்தது டிடிவி தினகரன் என்று குற்றம் சாட்டியவர், அதிமுக அரசை கவிழ்த்து விடுவதாகப் பேசிப் பேசி தொண்டர்களின் நம்பிக்கையை  இழக்க வைத்துவிட்டார். தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான தீர்ப்பை வழங்கிவிட்டார்கள்.

இவ்வாறு திவாகரன் கூறினார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: admk, Divakaran, Sasikala Brother, TTV.Dhinakaran
-=-