சட்டப்பேரவை வளாகத்திற்குள் டிடிவி தினகரன் – மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி வாழ்த்து!

சென்னை:

மிழக சட்டமன்றத்தின் புத்தாண்டில் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், சட்டமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த  டிடிவி தினகரனுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டமன்றத்தின் 15வது சட்டப்பேரவையின் 8வது கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் உரையுடன் சபை தொடங்கியது.

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் சபையைவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து கூறிய ஸ்டாலின்,  தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை, என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதிக்காததால் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் என்றும் வெளிநடப்புக்கு காரணம் கூறினார்.

திமுகவைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், அமமுக கட்சி எம்எல்ஏ, டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என கூறினார்.

முன்னதாக சட்டமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த  டிடிவி தினகரனுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.