சென்னை,

எம்ஜிஆர் பிறந்த நாளன்று தனிக்கட்சி தொடங்கும் அறிவிப்பு வெளியிடப்போவதாக பரபரப்பை ஏற்படுத்தி விட்டு, பின்னர், வழக்கு நிலுவையில் இருப்பதால், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை, அதிமுக அம்மா என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்படுவோம் என்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வெற்றிவேல், டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தால் தானும் சேர மாட்டேன் என்று கூறினார்.

ஏற்கனவே கடந்த 16ந்தேதி புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, எம்ஜிஆர் பிறந்த நாளன்று புதிய கட்சி அறிவிப்பு வெளியிடுவதாக கூறியிருந்தார். பின்னர்,  அடுத்த நாள் செய்தியாளர்களை சந்தித்தபோது தான் தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்றும், அதிமுகவையும் இரட்டை இலையையும் மக்கள் மன்றம் மூலமாகவும், நீதிமன்றம் மூலமாகவும் மீட்கும் திட்டம் தம்மிடம் இருப்பதாகவும், அதிமுக அம்மா அணி பெயரை உபயோகப்படுத்த நீதி மன்றம் தடை வித்தால், புதிய கட்சிதான் தொடங்க வேண்டும் என்றும்  மாறி மாறி பேசி அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரனின் புதிய கட்சி என்ற அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம்,  பேசிய டிடிவியின் தீவிர ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன், டிடிவி தனிக்கட்சி தொடங்கினால் அதில் நான் சேர மாட்டேன்… நான் அதிமுக காரன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது மற்றொரு டிடிவியின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேலும், செய்தியாளர்களிடம் பேசும்போது,  டி.டி.வி. தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தால் சேரமாட்டேன்  என்றும், கட்சியில் சேராமல் வெளியில் இருந்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறினார்.

டிடிவியின் தனிக்கட்சி அறிவிப்புக்கு முதன் முதலில் அவரது தீவிர ஆதரவாளரான  தங்கத்தமிழ்செல்வன் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது வெற்றிவேலும் தனிக்கட்சியில் சேர மாட்டேன் என்று கூறி யிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக 18 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை இழந்து, டிடிவிமீது அதிருப்தி தெரிவித்து வரும்  நிலையில், தற்போது தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல் போன்ற தீவிர ஆதரவாளர்களின் பேட்டி டிடிவி ஆதரவாளர்களிடையே, டிடிவி மீது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.