டிடிவி தினகரன் நாளை விடுதலை?

டில்லி,

ரட்டை இலை லஞ்சம் வழக்கில் டில்லி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனுக்கு டில்லி தீஸ் ஹசாரே நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இதைத்தொடர்ந்து நாளை மாலை அல்லது நாளை மறுதினம் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில், டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது தோழர் மல்லிகார்ஜுனா மற்றும் புரோக்கர் சகேஷ்சந்திரா, ஹவாலா புரோக்கர்கள் ஆகியோர் டில்லி சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 25ந்தேதி அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நீதிபதி பூனம் சவுத்திரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணயின்போது டில்லி காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தினகரன் ஜாமீன் மனுமீது டில்லி தீஸ் ஹசாரே நீதிமன்றம் ஜாமின் வழங்கி தீர்ப்பு கூறியது. அவரது தோழர் மல்லிகார்ஜுனாவுக்கு ஜாமின் வழங்கியது.

இருவருக்கும்  நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போது, டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தது குறித்து, டில்லி போலீசார் நிரூபிக்க தவறியதாலும், லஞ்சம் வாங்க முயன்ற தேர்தல் அதிகாரி அடையாளம் காணமுடியாததாலும்  ஜாமின் வழங்குவதாக நீதிபதி கூறி உள்ளார்.

மேலும்  தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகிய இருவரும் ரூ.5 லட்சத்திற்கு பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இருவரும் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது,  அத்துடன் சாட்சிகளை கலைக்கக்கூடாது நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவு நகல் நாளை சிறைச்சாலை சென்றடையும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து சிறை நடவடிக்கைகளை முடித்து நாளை மாலை அல்லது நாளை மறுதினம் அவர்  சிறையில் இருந்து வெளியே வருவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed