புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு இன்னொரு தீர்ப்பா.: டி.டி.வி. தினகரன்  

சென்னை: 

18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில்  இன்று வெளியாகி இருக்கும் தீர்ப்பால், நாங்கள் துவண்டுவிடமாட்டோம்; நாங்கள் அனைவரும் போராளிகள் என்று   டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு மாதிரியான தீர்ப்புகள் வழங்கி இருப்பதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரும், அமமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான டி.டி.வி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “18 எம் எல் ஏ.,க்கள் வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பால் நாங்கள் துவண்டுவிடமாட்டோம். இதை எதிர்த்துப் போராடுவோம்.  நாங்கள் அனைவரும் போராளிகள். 18 எம் எல் ஏ.,க்களும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் அணி மாறப் போகிறார்கள் என்று கூறி கொச்சைப்படுத்த வேண்டாம்.

வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் எனக்கு இரு கண்கள். கென்னடி என் சகோதரர். டாக்டர் முத்தையா எனது அண்ணன். ஆகவே  யாரையும் குறை சொல்ல வேண்டாம்.

நானே போக சொன்னாலும் யாரும் என்னை விட்டு போகமாட்டார்கள். நாங்கள் எந்த சோதனை வந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம். கட்சியை மீட்பதற்காக 18 எம் எல் ஏ.,க்களும், தொண்டர்களும் அணி சேர்ந்திருக்கிறோம்.

இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி அரசுக்கான ஆயுள் 3 அல்லது 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தீர்ப்பு குழப்பமாக இருக்கிறது.

பாண்டிச்சேரி சட்டசபை விவகாரத்தில் இதே போன்ற வழக்கில் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இன்று வேறு மாதிரி தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.

அதுகுறித்து தீர்ப்பையும், சட்டத்தையும் படித்துவிட்டுதான் பேச முடியும்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.