சென்னை:

டி.டி.வி.தினகரனை நடிகர் கமல்ஹாசன் தரைக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் வென்றார். ஆனால் வாக்காளர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தே தினகரன் வெற்றி பெற்றதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது.  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற தினகரன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதும் நடந்தது.

இந்த நிலையில்,  ஆனந்தவிகடன் இதழில் தான் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், “ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் திருடனிடம் பிச்சை எடுத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த தினகரன், ஆர்கேநகர் மக்களை கமல் கேவலப்படுத்துவதாகவும்,  அவர்  வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பேருந்து நிலையம் அருகே திரண்ட தினகரன் ஆதரவாளர்கள் கமலின் உருவ பொம்மையை எரிக்கப்போவதாக அறிவித்து கூடினர். அவர்களை காவல்துறையினர் தடுத்தனர்.

இந்த நிலையில் தினகரன்  ஆதரவாளர்கள், “தினகரன் குறித்த தரக்குறைவான விமர்சனங்களை கமல் நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் தகுந்த பின்விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியதிருக்கும்” என்று எச்சரித்தனர்.

கமலுக்கு எதிராக முழக்கமிட்டு கலைந்தனர்.

கமலுக்கு டிடிவி எதிர்ப்பு செய்தி::;

“திருடனிடம் பிச்சை”: கமல் கருத்துக்கு தினகரன் எதிர்ப்பு