டி.டி.வி தினகரன் ஆர்.கே. நகர், பெரம்பூரில் போட்டியிட வேண்டும்: வெற்றிவேல் மகன் பாரத் விருப்ப மனு தாக்கல்

சென்னை: டிடிவி தினகரன் ஆர்கேநகர், பெரம்பூரில் போட்டியிட வேண்டும் என்று  மறைந்த முன்னாள் அமமுக பொருளாளர் வெற்றிவேல் மகன் பாரத்  விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து அமமுகவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, அமமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில் விருப்ப மனுவை அக்கட்சியினர் அளித்து வருகின்றனர்.

இந் நிலையில், டிடிவி தினகரன் ஆர்கேநகர் மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று  மறைந்த முன்னாள் அமமுக பொருளாளர் வெற்றிவேல் மகன் பாரத் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, அமமுகவின் முதல் விருப்ப மனுவை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அளித்திருந்தார். அதில் டிடிவி தினகரன் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.