சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், முதல்நாளான இன்று, அரியலூரில், டிடிவி தினகரன் படத்துடனான  2 லாரி குக்கர்கள் சிக்கி உள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களிடம் கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு, பொதுமக்களை விலைக்கு வாங்கும் மன்னார்குடி மாஃபியாக்களின் ஆட்டம் தொடங்கி விட்டதாக அந்தப்பகுதி பொதுமக்கள் விமர்சித்துள்ளனர்.

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில்,  ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என  நேற்று மாலை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, அரசியல் கட்சிகளிடம் வாக்காளர்கள் இலவசமாக பணமோ, பரிசுப்பொருட்கள் வாங்கினாலும், அது குற்றமாக கருதப்படுகிறது.

தமிழகம் முழுவதும், தேர்தல் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  ஓட்டிற்கு பணம், பரிசுப்பொருட்கள்  விநியோகம் செய்வதை தடுக்க வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு 2  லாரியில் கொண்டு சென்ற ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான  3520 குக்கர்களை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 லாரிகளில் குக்கர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  அந்த குப்பரில் ஒட்டப்பட்டுள்ள  ஸ்டிக்கரில் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் வகையில்,  “ஜெயலலிதா பிறந்தநாள் விழா” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குக்கர்கள் அனைத்தும், அமமுக சார்பில் வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, தேர்தல் சின்னம்  குக்கர் ஒதுக்கப்பட்டுள்ளதால், மக்களிடையே அதை பிரபலப்படுத்தி வாக்குகளை பெறும்நோக்கில், குக்கர்களை அமமுக தலைமை தஞ்சாவூருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த முதல் நாளிலேயே முதல் கட்சியாக அமமுக சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.