Random image

நியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்?

நியூஸ்பாண்ட்:

“உள்ளே அழுகிறேன்.வெளியில் சிரிக்கிறேன். நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்…”  என்ற பாடலை மெல்லிய குரலில் ராகமாக பாடியபடி வந்தார் நியூஸ்பாண்ட்.

“என்ன ஆச்சு.. உற்சாக மூடா.. சோகமா..” என்று கேட்டபடியே வரவேற்றோம்.

“நமக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியோ, துக்கமோ ஏது? பிறரது உணர்வுகளை வெளிப்படுத்துவதுதானே நம் வேலை?” என்று தத்துவார்த்தாமக சொல்லியபடியே தனது நாற்காலியில் அமர்ந்தார் நியூஸ்பாண்ட்.

நாமும் விடாமல், “ஒரு பாடலை முணுமுணுக்கிறீர் என்றால் அதற்கான விசயம் இல்லாமல் இருக்காதே… சொல்லும்..” என்றோம். சென்னை குளிருக்கு இதமாக மசாலா இஞ்சி டீயை நீட்டியபடியே.

வாங்கி ஒரு சிப் பருகிய நியூஸ்பாண்ட், “ சொல்கிறேன்.. எந்தஒரு சூழ்நிலையிலும் புன்னகை முகம்காட்டுபவர் அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் தினகரன். எப்படிப்பட்ட எதிர்மறை கேள்வி கேட்டாலும் சிரித்தபடியே பதில் அளிப்பார். லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நிலையிலும் மலர்ந்த முகத்துடனே போஸ் கொடுத்தார். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோன நிலையில்கூட, “இது பின்னடைவு எல்லாம் இல்லை. வாழ்க்கையில் எல்லாம் அனுபவம்தான்..” என்று முகம் வாடாமல் தத்துவமாக பதில் அளித்தார்..!”

“இதெல்லாம் தெரிந்த விசயம்தானே.. விசயத்துக்கு வாரும்..!”

“வருகிறேன்..! அப்படி மலர்ந்த முகத்துடனே இருக்கும் தினகரன் தற்போது உள்ளுக்குள் மிகவும் குமைந்துபோய் கிடக்கிறார் என்கிறார்கள்!”

“ஏனாம்..?”

”இருபது சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு முன்பாகவே அ.ம.மு.க.,வை  அ.தி.மு.க.வில் இணைப்பதற்கான பேச்சவார்த்தை  திரைமறைவில் துவங்கிவிட்டது. ஜெயலலிதா பிறந்தநாளான  பிப்ரவரி 24ம் தேதி  இணைப்பு விழா நடத்தவிட வேண்டும் என்று இரு தரப்பினரும் நினைக்கறார்கள்!”

”இதில் தினகரன் வருத்தப்பட என்ன இருக்கிறது..? அவரும்கூட இணைப்பை விரும்புகிறவர்தானே..!”

“உண்மைதான். ஆனால் அவர் இல்லாமல் இந்த இணைப்பு நடக்க வேண்டும் என்று திட்டம்போட்டு வருகிறார்கள்!”

“என்ன சொல்கிறீர்..?”

 

 

”ஆமாம்! ஐந்து மாநில தேர்தலில் தோல்வி கண்டிருக்கும் பாஜக, வரும் பாராளுமன்றத் தேர்தலை அதிரடியாக எதிர்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இதன்  ஒரு பகுதியாக எப்படியாவது தமிழகத்தில் கணிசமான தொகுதிகளை அள்ளிவிட வேண்டும் என்று துடிக்கறது.

இங்கு தி.மு.க. – காங்கிரஸ்  கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பதே பலன் தரும் என்று பாஜக நினைக்கிறது.

அதே நேரம் சசிகலா, தினகரன் ஆகியோரை ஒதுக்கிவைக்க வேண்டும் என்கிற முடிவில் அதே மாறாத உறுதியுடன் இருக்கிறது..!”

“சரி..”

“என்ன சரி..? பா.ஜ.க. விரும்புகிறது என்றால் எடப்பாடி – ஓ.பி.எஸ்.  தலைமையிலான அ.தி.மு.க.வும் விரும்புகிறது என்றுதானே அர்த்தம்..? அதற்கான வேலைதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது..!”

“அப்படிப்போடு..!”

“சசிகலா, தினகரன் ஆகியோரை தள்ளி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக பாஜக இருப்பது ஒருபக்கம். இன்னொரு பக்கம்,  அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைத்தால் சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவியும், தனக்கு துணை முதல்வர் பதவியும் அளிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்கெனவெ வெளிப்படுத்தியிருந்தாராம் தினகரன்.

இது அ.தி.மு.க. தரப்புக்கும் உடன்பாடாக இல்லை..!”

“ஓ..!”

“ஆமாம்! இதனால்தான் தினகரனை தவிர்த்த சில அ.ம.மு.க. முக்கியஸ்தர்களுடன் அ.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். தினகரனை விட்டுவிட்டு வாருங்கள் என்பதுதான் நிபந்தனையாம். அப்படி வந்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்கிற உத்திரவாதமும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்!”

“அடேயப்பா..!”

“சசிகலா, தினகரன் தவிர்த்த அ.ம.மு.க.வினரை அ.தி.மு.க. பக்கம் இழுத்துவிடுங்கள் என்று டில்லியிலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. இது இங்குள்ள அதிமுக தலைமைகளுக்கும் உவப்பான விசயம்தானே!

இன்னொரு பக்கம் ஒதுங்கிவிடுங்கள் என்று சசிகலா, தினகரன் தரப்பக்கு அன்பான எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறதாம்!”

“அதென்ன அன்பான எச்சரிக்கை..?”

“சுவிஸ் நாட்டில் முறைகேடாக பணம் பதுக்கியிருக்கும் இந்திய நிறுவனங்கள், நபர்களின் பெயர்களை அளிக்க அந்நாடு ஒப்புக்கொண்டது. அதன்படி ஒரு பட்டியலும் அளித்துள்ளது. அந்த பட்டியலில் உள்ள ஒரு நிறுவனம் சின்னம்மாவுக்கு நெருக்கமானது. ஏற்கெனவே சின்னம்மாவின் சொத்துக்களை குறிவைத்த வருமானவரித்துறை ரெய்டு நடத்தியபோது, இந்த நிறுவனத்திலும் சோதனை நடந்தது. ஆகவே அந்த நிறுவனத்தை நூலாகப் பிடித்துக்கொண்டு சென்றால் சின்னம்மாவின் பலவித சொத்து விவகாரங்கள் வெளியில் வரும். இதைச் சொல்லியே ஒதுங்கிவிடுங்கள் என்று அன்பான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறதாம்!”

“அதெல்லாம் சரி..  தினகரன் இல்லாத அ.ம.மு.க. என்றால், யாருடன் அ.தி.மு.க. பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறது.. அதை நீர் சொல்லவே இல்லையே..!”

“உடன் இருப்பவர்களோடுதான். இதற்கு மேல் இப்போது கேட்காதீர்! விரைவில் செய்திகள் வரும்”

“சரி.. இதுவரை தினகரனுடன் இருந்தவர்கள் தற்போது விலக நினைக்க காரணம் என்னவாம்?”

“கட்சி நடத்துவது  என்பது யானையை கட்டி தீனி போடுவது போல. ஆனால் தினகரன் கையைச் சுருக்குகிறாராம். இதுவரை  செலவு செய்துகொண்டிருந்த செந்தில் பாலாஜியும் தி.மு.க. பக்கம் போய்விட்டார். தகுதி நீக்க வழக்கில் மேல் முறையீடு செய்யலாம் என்ற கோரிக்கையை தினகரன் ஏற்கவில்லை.  தி.மு.க. கூட்டணி பலமாகிக்கொண்டிருக்கறது. ஆகவே ஆர்.கே. நகர் போல இனி வரும் தேர்தல்களை நினைக்க முடியாது.. இப்படி அவரவருக்கு ஆயிரம் காரணங்கள்!” –  சொல்லிவிட்டு புறப்பட்டார் நியூஸ்பாண்ட்.