பெரியார் பற்றி ரஜினி பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்: யோசித்து பேசியிருக்க வேண்டும் என்றும் கருத்து

சேலம்: பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழர் நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த மாபெரும் தலைவர் பெரியார் குறித்து பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து உண்மை தன்மை கேட்டறிந்து பேசியிருக்கலாம். உடனிருக்கும் தமிழருவி மணியன் போன்றவர்களிடம் கலந்தாலோசித்து பேசியிருக்கலாம்.

கடவுள் மறுப்பிற்கு எதிரானவர்கள் கூட பெரியாரை மதிப்பவர்கள் தான். தந்தை பெரியார் ஒரு சமூக நீதி போராளி, பெண்ணுரிமை போராளி.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறை அதிகாரிகள் முனைப்போடு செயல்பட வேண்டும். நானோ, சசிகலாவோ துரோகிகளோடு ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை.

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வருவதற்கான சட்ட ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.