தினகரன் இன்று கைது?

டில்லி:

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. சசிகலா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அ.தி.மு.கவின் சசிகலா (தினகரன்) அணி, ஓ.பி.எஸ். அணி ஆகியோருக்கு இடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு  என்ற போட்டி நிலவி வருகிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று  தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை குறித்து முடிவு அறிவிக்கப்படும்  என்று எதிர்பார்க்கபட்டது. ஓபி.எஸ்.  அணியின் வழக்கறிஞர்களும், சசிகலா அணியின் வழக்கறிஞர்களும் தேர்தல் ஆணையத்தில் நேற்று ஆகியிருந்தனர்.

ஆனால் அதற்கு முன்பே டில்லி காவல்துறையினர்  வெளியிட்ட ஒரு தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இரட்டை இலை சின்னத்தை தினகரன் தரப்புக்கு பெற்று தர முக்கிய அதிகாரி ஒருவருக்கு 60 கோடி ரூபாய் லஞ்சம் அளிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் டில்லியை சேர்ந்த சுகேஷ் சந்தர் ஷேகர் என்பவரை கைது செய்தது.

சுகேஷ் சந்தர் ஷேகர் வீட்டில் டில்லி  காவல்துறையினர்ஆய்வு நடத்தி 1.3 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியதாகவும் புகைப்பட ஆதாரத்துடன் டில்லி காவல்துறை தெரிவித்தது.

மேலும்,. தினகரன் மீது பிணையில் வெளிவர முடியாத கிரிமினல் வழக்கும் பதிவு செய்யபட்டது.

இந்த நிலையில், தினகரன், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை சந்திக்க பெங்களூரு கிளம்பிவிட்டார்.  அதற்கு முன், “ கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தர் ஷேகர் யார் என்றே தெரியாது. நான் எவரிடமும்  பணம் கொடுக்கவில்லை” என்றார்.

 

இந்த நிலையில் டில்லி காவல்துறை தினகரனை கைது செய்யும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. டில்லி  காவல்துறையினர் இரண்டு குழுக்களாக கிளம்பி சென்னைக்கு ஒரு குழுவும்ம பெங்களூருவுக்கு ஒரு குழுவும் வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இன்று தினகரன் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரம், “அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் ஒருங்கிணைத்து தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க மத்திய பாஜக அரசு முயல்கிறது. ஆகவேதான் தினகரனை கைது செய்யத் துடிக்கிறது” என்று தினகரன் தரப்பினர் தகவல் பரப்பி வருகிறார்கள்.