விரைவில் டி.டி.வி. தினகரன் முதல்வர்!: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சால் எடப்பாடி அதிர்ச்சி!

மதுரை,

சிகலா ஆதரவு நிலக்கோட்டை தொகுதி அதிமுக  எம்எல்ஏவின் பேச்சு காரணமாக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது, விரைவில் சசிகலா முதல்வராவார் என்று கூறி, கட்சிக்குள் பரபரப்பை உருவாக்கியவர் தங்கத்துரை எம்எல்ஏ.

இவர் தற்போது டிடிவி தினகரன் விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறியிருப்பது அதிமுகவில் மீண்டும் பரபரப்பையும், பதபதைப்பையும் உருவாக்கி உள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஒபிஎஸ் தமிழக முதல்வராக பதவி வகித்து வந்தார். அவரை செயல்பட விடாமல் சசிகலா குடும்பத்தினர் மிரட்டி அவரை ராஜினாமா செய்ய வைத்தனர்.

அதைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் எண்ணத்தில், அதிமுக எம்எல்ஏக்களை கூட்டி, சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராக தன்னை பதவி ஏற்க அழைக்கும்படி கவர்னரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இதன் காரணமாக ஓபிஎஸ் சசிகலாவை எதிர்த்து தனி அணியாக வெளியே வந்தார். அவருக்கு துணையாக 10 எம்எல்ஏக்கள், 12 எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

சசிகலாமீது சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு  வர இருப்பதை காரணம் காட்டி நாட்களை கடத்தினார். இதன் காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் கூவத்தூர் அழைத்துச்சென்று அடைத்து வைத்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை கிடைக்கப்பெற்றதும், அவரது அக்காள் மகனான டிடிவி தினகரன அதிமுவின் துணைப்பொதுச்செயலாளராக நியமித்தார் சசிகலா.

அதைத்தொடர்ந்து சசிகலாவின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.

அவர் பதவி ஏற்று 3 நாட்களே ஆன  நிலையில், அவரது ஆதரவு எம்எல்ஏ ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது எடப்பாடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா இனி அரசியலுக்கு வர முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், டிடிவி தினகரனை முதல்வர் வேட்பாளாராக முன்னிறுத்த சிலர் வேலைகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாகத்தான்  போலீஸ் பாதுகாப்புடன் தனது தொகுதிக்கு வந்த   நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கதுரை, ஜெயலலிதா முதல்வராக  இருந்த போதே, டிடிவி.தினகரன் கட்சிப் பணிகளில் தன்னை இணைத்திருந்தார். அவரால்தான்  தேனி, பெரியகுளம் பகுதிகளில் கட்சி வளர்ந்தது என்றார். மேலும்  தினகரன் தமிழக  முதல்வர் ஆகும் காலம் விரைவில் வரும் என்றும் அதிரடியாக கூறனிர்.

தங்கதுரையின் பேச்சால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிர்ந்துபோய் உள்ளது. தவிர, தினகரன் தரப்பும்கூட அதிர்ச்சியாகி இருக்கிறதாம்.

காரணம், “ஓ பன்னீர் செல்வம் முதல்வராக பதவி ஏற்ற சில நாட்களில், “விரைவில் சசிகலா முதல்வராவார்”, என்று முதன் முதலில் சொன்னவர் இதே தங்கதுரைதான்.

இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார். தவிர, டிடிவி தினகரன் காஃபிபோசா சட்டத்தால் தண்டிக்கட்ட குற்றவாளி. மேலும் இவர் மீது பல வழக்குகள் அவர் மீதும் நிலுவையில் உள்ளன. ஆகவேதான் தங்கதுரையின் பேச்சு, தினகரன் தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது” என்றும் சொல்லப்படுகிறது.