ஜெயலலிதாவுக்கு டிடிவி தினகரன் 100வது நாள் அஞ்சலி

சென்னை:

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி இறந்தார். அவர் இறந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா பதவி ஏற்றார். இவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பதவி ஏற்றார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலா தரப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். சசிகலா, தினகரன் பதவி ஏற்றது செல்லாது என்று அவர் ஓபிஎஸ் அணியினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மேலும், இந்த தொகுதியில் தினகரனே போட்டியிடுவார் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதோடு, சமீபத்தில் ஒரு டிவி.க்கு அளித்த பேட்டியில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியவுடன் என்னை கட்சியில் சேர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா உறுதி அளித்திருந்தாக தினகரன் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா இறந்து இன்றோடு 100 நாட்கள் ஆகிறது. இதை நினைவு கூறும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தினகரன் அஞ்சலி செய்தியை வெளியிட்டுள்ளார். அதோடு, தினகரன் பெரியகுளம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாக ஜெயலலிதா பிரச்சாரம் செய்த புகைப்படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தினகரனை நோக்கி ஜெயலலிதா கை காட்டுவது போல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.