அ.தி.மு.க.வில் இருந்து டிடிவி தினகரன் நீக்கம்!! ஜெயக்குமார் பேட்டி

சென்னை,:

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அமைச்சர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் அதிமுக அமைச்சர்கள், எல்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். ஆலோசனை கூட்டத்தை அடுத்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ஜெயலலிதா வழிநடத்திய கட்சியையும், அவரது பொற்கால ஆட்சியையும், வரும் 4 வருடங்கள் மட்டுமல்ல ஆண்டாண்டு காலமும் தமிழகத்தில் தொடர்வதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்,பிக்கள், மாநில-மாவட்ட நிர்வாகிகள் என அனைவருமே கூடி, ஒருமித்த ஒரு ஒட்டுமொத்த கருத்தை முடிவு செய்திருக்கிறோம்.

அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களின் விருப்பமும், தமிழக மக்களின் விருப்பமும் கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல் முழுமையான அளவு அவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு, அதாவது டிடிவிதினகரனை சார்ந்த குடும்பத்தை முழுமையான அளவு ஒதுக்கிவிட்டு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துங்கள் என்பது தான் ஒட்டுமொத்த தொண்டர்களின், தமிழக மக்களின் விருப்பம்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘இதுதான் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களின் விருப்பமும் கூட. அந்த விருப்பத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்னவென்றால் கட்சியிலும், ஆட்சியிலும் இனி டிடிவிதினகரன் சார்ந்த குடும்பத்தை முழுவதுமாக ஒதுக்கிவிட்டு, அவர்களின் தலையீடு எள்ளளவும் இல்லாமல் முழுமையாக ஒதுக்கிவிட்டு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவோம் என்கிற அளவுக்கு விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் பேசுகையில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சியை வழிநடத்துவோம் என்றும் குறிப்பிட்டார். அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவை வழிநடத்த விரைவில் குழு அமைக்கப்படும்’’ என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து பேசுகையில், ‘‘அனைவரது விருப்பத்தின்படி கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது, கட்சியிலும், ஆட்சியிலும் இனி டிடிவிதினகரன் சார்ந்த குடும்பத்தை முழுவதுமாக ஒதுக்கிவிட்டு, அவர்களின் தலையீடு எள்ளளவும் இல்லாமல் முழுமையாக ஒதுக்கிவிட்டு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவோம் என்கிற அளவுக்கு விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை முடிவாக நாட்டு மக்களுக்கும், கட்சி சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அந்த விருப்பம் இன்று முழுமையாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

ஒதுக்கப்பட்டதாக கூறிய நபர்களின் சசிகலாவும் அடங்குவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய ஜெயகுமார், இந்த இயக்கத்தை ஜெயலலிதா ஒரு மாபெரும் இயக்கமாக மாற்றி காட்டினார். இந்த சூழ்நிலையை பொறுத்தவரை கட்சியை வழிநடத்துவதற்கு, காப்பாற்றுவதற்கு ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு பற்றி விரைவில் அறிவிக்கப்படும் ’’ என்றார்.

பிற கேள்விகளுக்கு ஜெயக்குமார் பதில் கூறுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறினார். நாங்களும் தயார் என்று கூறினோம்.

நாளைக்கே அவர் வந்தால் கூட பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அவரது கருத்தை வரவேற்கிறோம் என்று இன்றைக்கு சொல்கிறோம், என்றைக்கும் சொல்வோம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed