நடுக்கடலில் எம்.எல்.ஏக்கள்… தத்தளிக்கும் தினகரன்!

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை இன்று சந்திப்பதாக இருந்த டி.டி.வி. தினகரன், சந்திப்பைத் தவிர்த்து சென்னை திரும்பினார்.

அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூரு சென்றார். சிறை விதிப்படி நேற்று அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து இன்று சசிகலாவை சந்திக்கும் நோக்கத்தில் பெங்களூருவிலேயே தினகரன் சந்தித்தார்.

இதற்கிடையே அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படும் முயற்சி சென்னையில் நடந்தது. இரு அமைச்சர்கள் இல்லத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. அதிமுகவைச் சேர்ந்த மக்களவை சபாநாயகர் தம்பிதுரை., தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், இரு அணிகளும் இணைந்து செயல்பட முயற்சிகள் துவங்கியுள்ளதாகவும் விரைவில் இது நடக்கும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், டிடிவி தினகரனை ஒதுக்கிவிட்டு இரு அணிகளும் இணைந்து செயல்படப்போவதாக தகவல் பரவியது.

இந்த நிலையில், இன்று சசிகலாவை சந்திப்பதாக இருந்த தினகரன், அந்த சந்திப்பு முயற்சியை கைவிட்டு சென்னை திரும்பினார்.

ஆனால் இதுவரை அவரது கட்டுப்பாட்டில் இருந்த அம்மா அணி எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுக வின் இரு அணி எம்.எல்.ஏக்களும், தினகரன் இன்றி இன்று நடுக்கடலில் கப்பலில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்.

ஆகவே தனக்கென ஆதரவு எம்.எல்.ஏக்கள் எவரும் இன்றி தினகரன் தத்தளிப்பதாக அதிகமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.