அரசு மிஷினே செயல்படலை… விஷனை எப்படி செயல்படுத்துவார்கள்?: தினகரன் பஞ்ச்

சென்னை:

ளுநர் உரையில் எந்தவித முக்கிய அம்சங்களுமே கூறப்படவில்லை. எந்த அறிவிப்புகளும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சட்டசபை கூடிய முதல் தினமான இன்று ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ. டிடிவி தினகரன், தனி ஆளாக சென்று ஆளுநர் உரையை குறிப்பெடுக்கத் தொடங்கினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் எவரும் சபைக்கு வரவில்லை.

சபை முடிந்ததும், செய்தியாளர்களை சந்தித்த தினகரன் பேசியதாவது:

“விஷன் 2023 என்று ஆளுநர் உரையில் கூறியுள்ளனர். அரசு மிஷினே செயல்படாத போது விஷன் எப்படி செயல்படுத்துவார்கள்?

ஓகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசிய பேரழிவாக அறிவிக்கவில்லை. கூடங்குளத்தில் அணு உலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மொத்தத்தில் ஆளுநர் உரை கண்துடைப்பு.

மெஜாரிட்டி இருக்கிறதா என்று கேட்க வேண்டிய ஆளுநர், இப்போது அரசை பாராட்டிக்கொண்டிக்கிறார். இது ஓரு சடங்குபோலவே இருக்கிறது.

இந்த அரசே செயல்படவில்லை. அவர்களுக்கு உள்ளேயே பயம் இருக்கிறது. அதுதான் மேஜையை தட்டிக்கொள்கின்றனர். நித்திய கண்டம் பூரண ஆயுசாக இந்த அரசு உள்ளது.

இங்கே  தொழில் முதலீடு செய்ய யாராவது முதலீட்டாளர்கள் வருவார்களா?

இந்த ஆட்சி விரைவில் கவிழும். அது அவர்களுக்கே நன்றாக தெரியும். சில எம்எல்ஏக்கள் என்னைப்பார்த்தும்  பார்க்காதது போல குனிந்து கொள்கின்றனர்” என்று தினகரன் தெரிவித்தார்.