முற்றுகிறது மோதல்: முதல்வர் விழாவை புறக்கணித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்.

 

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. . இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்பி வைக்கப்பட்டது. ஆனால் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இதனால் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.  இது குறித்து அவரும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதே போல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை புறக்கணிப்பார்கள் என்று தகவல் பரவியது.

இதற்கிடையே அ.தி.மு.க அம்மா அணியை சேர்ந்த அன்வர்ராஜ் எம்.பி தினகரனை இன்று காலை சந்தித்தார்.  அப்போது அதிமுக அம்மா அணி நடத்தும் இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

இந்நிலையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவில்லை.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் மிகச் சிலர் மட்டுமே வந்து சென்றனர்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.