தினகரன் – பாண்டே: என்னதான் நடந்திருக்கும்?

சிறப்புக்கட்டுரை: கோதண்டராமன் சபாபதி

“வணக்கம். …  பத்திரிகை ஆசிரியர் பேசுறேன். இந்தவாரத்தின் முக்கிய நிகழ்வு பற்றி கட்டுரை கேட்டிருந்தேனே.? என்ன ஆச்சு.?”

“அனுப்பிட்டேன் சார். யார் குழந்தை யாருக்கு குழந்தை தலைப்பு வச்சு மெயில் பண்ணி யிருந்தேனே.?”

கட்டுரையா அது? முக்கிய நிகழ்வா அது? அதப்பற்றி சமூக வளைதளங்கள்ல எத்தனை பேர் எழுதியிருப்பாங்க?”

“ஏன் சார் நான் கூட முகநூல்ல ஒரு பதிவெழுதி நாற்பது லைக்கும் நாலு கமாண்டும் வந்ததே சார்.!”

“நீயே பதிவு எழுதி நீயே அதை முக்கிய நிகழ்வுன்னு முடிவுக்குவந்திடுவியா?”

“வேற எத பற்றி எழுதனும் சார்?”

“நீ எழுதவே வேண்டாம். தந்தி டிவில பாண்டே -டி.டி.வி.தினரன் பேட்டி பார்த்தியாய்யா.?”

“இதெல்லாம் முக்கியமில்லைன்னுட்டு பார்க்காம விட்டுட்டேன் சார்.”

“நீ முக்கியமில்லைங்கிற. சமூகவளைதளம் முழுதும் அதைப்பற்றிதான் பதிவா இருக்கு.”

“ஆமா சார். எவன் ஒருத்தன் அதைப்பற்றி எழுதலையோ அவனுக்கு லேட்டஸ் நியூஸ்ல டச் இல்லை இல்லன்னா அவனோட மொபைல்ல டச் சரியில்லைன்னு அர்த்தம்னு நினைக்க வைக்கிற அளவிற்கு எல்லாருமே எழுதிட்டாங்க சார். அதற்குப்பிறகுதான் நானே பேட்டியை மறு ஒளிபரப்பில் பார்த்தேன்.”

“தினகரனுக்கு அவ்வளவு ஆதரவா.?எப்படி இவ்வளவு கவனம் பெற்றுச்சு அந்த பேட்டி.?”

“தினகரனுக்கு ஆதரவு எவ்வளவுங்கிறது இல்ல விசயம். பாண்டேவை தினகரன் தினகரன் தினறடிச்சதுதான் விசயம்.”

அப்போ வேற யாராலும் தினறவைக்க முடியாத அளவிற்கு திறமையான ஆளா.?

“பின்ன..?  பாண்டே தினறியதை இவ்வளவுபேர் கொண்டாடுறாங்கன்னா அத்தனை பேர் மனதிலும் பாண்டேவைப்பற்றி அப்படிப்பட்ட எண்ணம் இருந்திருக்குன்னுதானே அர்த்தம். தவிரவும் துரைமுருகன் ப.சிதம்பரம் சுப.வீ போன்ற மிகச்சிலரைத்தவிர மற்ற எல்லாருமே பாண்டே கிட்ட தினறத்தானே செய்றாங்க. அப்படிப்பட்ட திறமைசாலியை தினகரன் தினறவைத்துவிட்டார் என்பதால்தான் அந்த பேட்டி வைரலாகிவிட்டது. பலர் கொண்டாடுறாங்க.”

”அப்படிப்பார்த்தாகூட தினகரன் ஆளுங்க மட்டும்தானே கொண்டாடனும். எல்லா கட்சியும் கொண்டாடுறாங்களேய்யா?”

”சிம்பிள் லாஜிக் சார். சமூகத்துல நம்மால் அடிக்க முடியாத கேரக்டர்களை திரையில் நாயகன் அடிச்சு துவைக்கும்போது கைதட்டுறோம் இல்லையா அப்படித்தான் இதுவும். ஒவ்வொரு கட்சித்தலைவர்களும் பாண்டேகிட்ட தினறுவதையே பார்த்து நொந்தவங்ளுக்கு இந்த பேட்டி ஆறுதல். தன் தலைவன் செய்யமுடியாததை தினகரன் செய்ததால் கொண்டாடுறாங்க.”

”சரி. பாண்டேவின் கேள்விக்கு அசராத திமுகவும் அதன் கூட்டணியை சேர்ந்தவர்களும் கொண்டாடுறாங்களே.?”

“திமுகவினர் கணக்கு வேறு. எதிரிக்கு எதிரி நண்பன்ங்கிற மாதிரி தற்போதைக்கு ஆட்சியையும் இரட்டை இலையையும் வைத்திருக்கும் எடப்பாடிக்கு எதிரி தினகரன். தினகரன் கை ஓங்குவது நல்லது என்று தொண்டர்கள் சிலர் நினைக்கிறார்கள் போல. தவிரவும் அவர்களுக்கும் பழைய வஞ்சம் இருக்கு. சொத்துக்குவிப்பு வழக்கை சொத்து வழக்கு என்று பாண்டே விடாப்பிடியாக குறிப்பிட்டு வந்தது. முக்கியமான கருத்துகளை சொல்லவிடாமல் இடைமறித்து பேசவிடாமல் செய்தது இப்படி நிறைய.”

“தினகரனும் திறமையான ஆள்தான் இல்லையா?”

“தினகரன் திறமையான ஆளா இல்லையா என்பதைவிட தினகரனை மடக்கும்விதமாக கேள்விகள் கேட்கப்பட்டதா இல்லையா என்பதைதான் பார்க்கனும்.”

“கேட்கப்பட்டதா?”

“இல்லை. சாதாரண பாமர மக்கள் தினகரனிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்டி ருந்தால்கூட தினகரன் தினறியிருப்பார். பாண்டே அவற்றை கேட்கவே இல்லை.”

“அப்படி என்ன கேள்வி எது?”

“ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்ற தீர்ப்பு வந்தது தெரியுமா தெரியாதா.?

குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டை சோதனையிடுவதை பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததற்கு ஈடாக பேசுகிறீர்களே.?

எனில் தீர்ப்பு தவறானதா அல்லது மக்கள் சிந்திக்கத்தெரியாத முட்டாள்கள் என்கிற எண்ணமா.? ஜெவுக்கு உடந்தையாக இருந்ததால்தானே சின்னம்மாவிற்கு சிறைதண்டனை கிடைத்தது. இருந்தும் ஜெவை புனிதர் போல பேசுகிறீர்களே.?

திமுக நீண்டகாலமாக பேசிவந்த மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை நீங்களும் தற்போது ஒரு பேட்டியில் குறிப்பிட்டீர்கள். நீட் தேர்வு. உதய் மின்திட்டம் போன்றவை எந்த அடிப்படையில் கையொப்பம் ஆகின.?

ஜெயலிதாவின் மரணம் பற்றிய முன்னுக்குபின் முரணான பல தகவல்களுக்கும் உங்கள் பதில் என்ன.?

இப்படி கேட்கவேண்டிய கேள்விகளை விட்டுவிட்டு வேறு ஏதேதோ கேட்டதால்தான் தினகரன் அடித்து ஆடினார்.”

“திறமைசாலி என்று நீயே சொன்ன பாண்டே தினறியதற்கான காரணம் என்ன.? அதையும் நீயே சொல்லிவிடு.”

“பேட்டியில் வெளிப்படும் திறமை என்பது படிப்பு அறிவினால் மட்டும் வருவதில்லை.அவரவர் தாங்கிப்பிடிக்கும் கொள்கையையும் சார்ந்தது.”

“எப்படிச்சொல்கிறாய்?”

“விடுதலைச்சிறுத்தைகள் தொல்.திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தபோதும் மக்கள் நலக்கூட்டணியில் இருந்தபோதும் தந்த இருவேறு பேட்டிகளை பார்த்தால் ஒன்றில் அவர் பதில்தர நேரமெடுப்பது விளங்கும்.”

“நீ ஏன் சம்மந்தமில்லாமல் திருமாவளவனைப்பற்றி பேசுகிறாய்.?பாண்டே தினறக்காரணம் என்ன?”

“பாண்டேவும் அவர் பணியாற்றும் தந்தி டிவியும் பிஜேபி ஆதரவாகவே செயல்படுகின்றன. ஜெயலிதாவின் புனித பிம்பம் கெட்டுவிடக்கூடாது என்பதில் பாண்டே கண்ணும் கருத்துமாக இருப்பார் . இதனால்தான் காட்டமான கேள்விகளை கேட்க முடியாமல் தினகரனிடம் பாண்டே பதுங்க வேண்டியிருந்தது.”

“சரி. தினகரனின் எந்தக்கொள்கை அவருக்கு இத்தனை துணிச்சலை தந்தது என்று நீ நினைக்கிறாய்.?”

“நான் நினைப்பதை விடுங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் பாண்டே ஜெ வை விட்டுத்தர மாட்டார் என்று தெரிந்துதான் தினகரன் அடித்து ஆடியதாக ஒரு பதிவு பார்த்தேன். கேட்பதற்கு சுளையாக கேள்விகள் இந்தும் பாண்டே கேட்கத்தவறியதைப்பார்த்தால் அது உண்மை என்றே தோன்றுகிறது.”

“இறுதியாக என்னதான் சொல்ல வருகிறாய்?”

“தினகரன் கேள்விகளால் மடக்க முடியாதவரும் இல்லை. பாண்டே திறமை குறைந்தவரும் இல்லை.”

“சரி. போனை வை.”

“சார் ஒரு நிமிடம். இவ்வளவு விசயம் இருக்கிற இதை விட்டுவிட்டு நான் ஏன் வேறு ஏதோ எழுதனும்? இதையே கட்டுரையா எழுதவா சார்.?”

“இவ்வளவு நேரம் கேள்விமேல் கேள்வி கேட்டதே அதற்காகத்தான். நான் பேசும் கடைசி வாக்கியம் வரை கட்டுரைக்காகத்தான். இப்ப தெரியுதா நான் ஏன் உன்னை டியூப் லைட்டுன்னு சொல்றேன்னு?”

“சார்..!!”