சென்னை,

ரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இன்றைய தீர்மானத்தில் சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் ரத்து உள்பட பல்வேறு அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

இன்று நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்த பொதுக்குழு கூட்டம் வெற்றிகரமாக  நடைபெற்றுள்ளது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து முதல் வெற்றியை பெற்றுள்ளோம் என்று கூறினார்.

பொதுக்குழுவுக்கு நீதி மன்றம் மூலம் தடை விதிக்க முயற்சித்த நிலையில்,  நீதிமன்றம் தடை விதிக்காதது நமக்கு கிடைத்த முதல் வெற்றி என்று பெருமிதமாக கூறினார்.

மேலும், ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பிரிந்த இயக்கம் ஒன்றிணைந்த வரலாறு இல்லை. ஆனால், நாம் இணைந்துள்ளோம் என்று கூறினார்.

இனி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தமிழகத்தில்  தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வந்திருப்பது அதிமுக மட்டும்தான். தமிழகத்தில் ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்திருப்பது அதிமுக மட்டும்தான் என்று கூறினார்.

மேலும், கட்சியில் உறுப்பினரல்லாத டிடிவி தினகரனை மற்றவர்களை எப்படி நீக்க முடியும்? என்ற எடப்பாடி, கடந்த 10 ஆண்டுகளாக டிடிவி தினகரன் எங்கே சென்றார் என்று கேள்வி எழுப்பினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன். அவர் எங்களை துரோகி என்கிறார். கூட்டம் நடைபெறாது என சிலர் யோசித்தபோதும் தொண்டர்களின் ஆதரவால் பொதுக்குழு வெற்றிரமாக  நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.