சென்னை,

மிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் நாளை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசுகிறார். அப்போது, ஆட்சியை கலைக்க அவர் கோரிக்கை விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை காரணமாக 3 ஆக உடைந்த அதிமுக தற்போது இரண்டு அணியாக உள்ளது.

எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், டிடிவி தலைமையில் 19 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தனி அணியும் செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து,  டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுனர் வித்யாசாகர் ராவை  சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம், அவரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்திருந்தனர்.

மேலும், திமுக உள்பட எதிர்க்கட்சியினரும் ஆளுநர் மற்றும் ஜனாதிபதியிடம், எடப்பாடி அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் அரசின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். அதனையேற்று, சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு  நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.

அவர்களின் பதவி முடக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க டிடிவி தினகரன் அனுமதி கோரியிருந்தார்.

நாளை அவருக்கு கவர்னரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களுடன் சேர்ந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை சந்திக்கவுள்ளார்.

அப்போது அவர், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைக்க கோரிக்கை விடுக்கலாம் என கூறப்படுகிறது.

டிடிவியுடன் 10 பேர் மட்டுமே செல்ல ஆளுநர் மாளிகை அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.