சென்னை:

அதிமுக இரு அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்கள் இன்று இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் எம்எல்ஏ.க்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்த பன்னீர்செல்வத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர் முதல்வர் எடப்படாடி பழனிச்சாமி.

பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்த பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தான் அவரை நீக்குவதாக கூறுகின்றனர். பொதுச் செயலாளர் சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரகம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு. அவர் இல்லாததால் அந்த அதிகாரிகள் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு மட்டுமே உள்ளது’’ என்றனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘ இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்தை ஏற்க முடியாது. ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் விட்டு கவலைகளை கூறியுள்ளோம். 25 எம்எல்ஏ.க்கள் உள்ள எங்களை ஏன் இணைப்பு குறித்து கேட்கவில்லை.

10 எம்எல்ஏ.க்களை மட்டும் வைத்திருக்கும் பன்னீர்செல்வத்தை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன. எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 பேர் ஆதரவு தெரிவித்தோம்’’ என்று தெரிவித்தனர்.

நாளை காலை 10 மணிக்கு நாங்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.