டிடிவி தரப்பு வெளியிட்டது ‘மார்பிங் வீடியோ’: ஜெ. தோழி குற்றச்சாட்டு

சென்னை,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், தற்போது ஜெ. சிகிச்சை குறித்த வீடியோவை டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார்.

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வீடியோவை வெளி யிட்டது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அப்பல்லோ நிர்வாகம், இந்த வீடியோ அப்பல்லோ மருத்துவமனையில் எடுக்கப்பட வில்லை என்று அறிவித்துள்ள நிலையில், ஜெ.வின் தோழியான கீதாவும் வீடியோ குறித்து சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.

இந்த வீடியோ மார்பிக் செய்யப்பட்டது என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதாவின் தோழியான கீதா கூறும்போது,  ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதியே நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். அப்போதே இந்த  வீடியோவை வெளியிட்டிருக்கலாமே.  அப்போதும் அவர் உயிருடன் இல்லையே, அன்று வெளியிடாமல் ஒராண்டு காத்திருந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த  வீடியோ,  ஜெயலலிதா போன்ற  ஒரு பொம்மையை தயார்  செய்து மார்பிக் செய்து  இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த வீடியோ தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த வீடியோவில்,  ஜெயலலிதாவின் கால்கள் பொம்மை கால்கள் போலத் தான் இருக்கிறது, அசையாமல் அப்படியே இருக்கிறது.

அவருடைய கைகள் ஒரே நிலையில் சென்று வருகிறது முகத்தில் எந்த பாவனையும் இல்லை என்று கூறிய கீதா,

ஜெயலலிதா இறந்த பின்னர் உடனேயே வீடியோவை வெளியிட வேண்டியது தானே.

இந்த வீடியோக்களைப் பார்த்து பாமர மக்கள் ஏமாறலாம் ஆனால் படித்தவர்கள் யாரையும் முட்டாளாக்க முடியாது.

இது உண்மையான வீடியோ கிடையாது, அரசியலுக்காக தினகரன் இந்த ஸ்டண்ட் நடத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ள கீதா,  ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று பிரதாப் ரெட்டி கூறியதை சுட்டிக்காட்டி, அப்படி  இருக்கும் போது இந்த வீடியோ நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும், ஜெயலலிதாவை கொன்றது சசிகலா குடும்பம் தான் என்பதை நிரூபிப்பேன் என்றும் கீதா தெரிவித்துள்ளார்.