டிடிவி ஆதரவு 18 பேர் தகுதி நீக்க வழக்கு: இன்று பிற்பகலில் 3வது நீதிபதி விசாரணை

சென்னை:

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், 3வது நீதிபதி விசாரணை இன்று பிற்பகல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடிக்கு எதிராக கொடிபிடித்த டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து அறிவித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதி மன்ற அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வழக்கு  3வது நீதிபதியின் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதை எதிர்த்தும்,  3வது நீதிபதியின் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களில் தங்கத்தமிழ்செல்வன் தவிர  17 பேரும் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுமீதான விசாரணையின்போது,  வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், 3வது நீதிபதி யாக விமலாவுக்கு பதில் நீதிபதி சத்தியநாராயணா விசாரிப்பார் என்று உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த  வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில்  உயர்நீதி மன்ற தலைமைப் பதிவாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணா முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.