18எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: வியாழக்கிழமையுடன் விசாரணை நிறைவு

சென்னை:

சென்னை உயர்நீதி மன்றத்தின் 3வது நீதிபதி விசாரணை நடத்தி வரும், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வரும் வியாழக்கிழமையுடன் வாதங்களை முடிக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இதன் காரணமாக இந்த வழக்கின் தீர்ப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு இருப்ப தாக எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் (ஜூலை) 23 முதல் 27ம் தேதி வரை 5 நாட்கள் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்தும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம்,  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக அவர்கள் கொடுத்த கடிதத்தின் மீது, ஆளுநர் ஏதும் நடவடிக்கை எடுக்காத போதும் 18 எம்.எல்.ஏக்களும் ஏன் கட்சிக்கு திரும்பவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சார்பில் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தகுதிநீக்கம் வழக்கு தொடர்பாக அறிவிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைவ தால், இறுதி வாதங்களை முன்வைக்க இருதரப்பிலும் நீதிபதியிடம் அனுமதி கோரினர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் வியாழக்கிழமைக்குள் வாதத்தை   முடிக்க உத்தரவிட்டு உள்ளார்.  இதன் காரணமாக வழக்கின் தீர்ப்பு இந்த மாதத்திற்குள்ளேயே வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.