18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை முடிந்தது: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை:

டிடிவி ஆதரவு  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக 3வது நீதிபதியின் முன்பு நடைபெற்று வந்த விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

முதல்வர்  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற தலைமைநீதி தலைமையின 2 நபர் பெஞ்சு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 3வது நீதிபதியாக  நீதிபதி மாலா நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து டிடிவி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது. அதையடுத்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக உச்சநீதி மன்றம்  நியமித்தது.

இதையடுத்து3வது  நீதிபதி சத்யநாராயணன்  கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார். விசாரணை யின்போது,   அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், இன்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை நிறைவு செய்தார்.

இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி.