டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 27ந்தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை:

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்த உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு வரும் 27ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

ஜெ. மறைவை தொடர்ந்து உடைந்த அதிமுக மீண்டும் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இன்றி ஒட்டிக்கொண்டது. இதையடுத்து, இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறிங்கிய சசிகலா அக்காள் மகன் டிடிவி தினகரன், அதிமுக எம்எல்ஏக்களில் 18 பேரை தனவசமாக்கினார். அவர்கள் மூலம், எடப்பாடியை மாற்றக்கோரி கவர்னருக்கு கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்தார். இது கட்சியின் கொறடா விதியை மீறிய செயல் என்று கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த  18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக கொறடாக சபாநாயகர் தனபாலுக்கு கோரிக்கை வைத்தார்.   அதையடுத்து, மற்ற 18 எம்எல்ஏக்களும்  தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு  கடந்த வாரம் தீர்ப்பு  வழங்கியது.

அதில்,  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது. அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். ஆனால்,  நீதிபதி சுந்தர் கூறுகையில், சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது என்று தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததார், விசாரணை 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து 3வது நீதிபதியாக  விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவித்தார்.

இந்த பரபரப்பான நிலையில்,  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர மற்ற  17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக  மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து  உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும்,  சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தால்,  உரிய நீதி கிடைக்காது என்றும், அவசர வழக்காக இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்றும்  அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் வழக்கின் விசாரணை நாளை மறுநாள் (27ந்தேதி) நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.