சென்னை,

டிடிவி தினகரன் தீவிர ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வனின் உதவியாளர் கனகராஜ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தமிழ்செல்வன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

சசிசகலா தரப்பினர்கள் வீடுகளில்  நேற்று முதல் நடைபெற்று வரும் சோதனைகளின்போது கிடைத்த ஆவனங்கள் மூலம் வருமான வரி சோதனை விரிவடைந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், தற்போது தங்கத்தமிழ்செல்வனின் உதவியாளர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

எடப்பாடிக்கு எதிராகவும், டிடிவி ஆதரவாகவும் செயல்பட்டு வந்த சட்டமன்ற உறுப்பினர்களின் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் தங்கத்தமிழ் செல்வன். இவர் ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு எதிராக அதிரடி பேட்டிகள் கொடுத்ததன் மூலம் பிரலமானவர் தங்கத்தமிழ் செல்வன்.

இதன் காரணமாக சபாநாயகரின் அதிரடி முடிவு காரணமாக தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டவரா இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முதல் தமிழக்ததில்  சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தங்கத்தமிழ் செல்வன்,  துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் தூண்டுதலின் பேரில் தான் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடிக்கு முன்கூட்டியே  தெரியும் என்றும்,  மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு டைரியை கைப்பற்றினார்கள். ஆனால், அந்த டைரியில் இடம்பெற்ற வர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்? என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற சோதனையின்போது,  ஏராளமான ஆவணங்கள், போலி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததாக வருமான வரித்துறையினர் கூறியிருந்தனர்.

அதன் அடிப்படையில்,  தற்போது கம்பத்தில் உள்ள தங்க தமிழ் செல்வனின் உதவியாளர் கனகராஜ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து தனது மற்றும் தனது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுமோ என்றுதங்கத்தமிழ் செல்வன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்களும், தங்கள் வீடுகளில் எப்போது சோதனை நடைபெறுமோ என பயத்துடன் தவித்துக்கொண்டிப்பதாகவும் கூறப்படுகிறது.