Random image

அமைச்சர் செங்கோட்டையன் தொகுதி கூட்டுறவு தேர்தலில் டிடிவி அணி வெற்றி: அதிமுகவில் மீண்டும் சலசலப்பு

ஈரோடு:

மிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தொகுதியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்து, டிடிவி ஆதரவாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் தோல்விக்கு அமைச்சர் செங்கோட்டையனின் உள்குத்தே காரணம் என்று அவரது கட்சி நிர்வாகிகளபால் விமர்சிக்கப்படுகிறது. இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் குழப்பம் மேலோங்கி உள்ளது.

தமிழகத்தில் தற்போது கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளும் அதிமுகவே வெற்றி பெற்று வருகிறது. அதுபோல  ஈரோடு மாவட்டத்தில்  நடைபெற்ற அந்தியூர் வேலாண்மை விற்பனை கூட்டுறவு சங்க தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களே முழுவதும் வெற்றி பெற்றனர்.  அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

இந்த பகுதிஅமைச்சர் செங்கோட்டையனின் கோட்டை என்று கூறப்படுகிறது. இங்குள்ள அந்தியூர் பருவச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில் அ.தி.மு.க., மட்டுமின்றி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் போட்டியிட்டது. இதில், வெற்றி பெற்ற 11 பேரும்  டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக  உள்பட மற்ற கட்சியினர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தோல்வி அடைந்தனர்.

அதுபோல, மொடக்குறிச்சி, வேலாண் விற்பனை பொருள் கூட்டுறவு சங்க தேர்தலில் 11 உறுப்பினர்களும் திமுகவினரே வெற்றி பெற்றனர். இங்கும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.

அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறாமல் டிடிவி அணியும், திமுக அணியும் வெற்றி பெற்றிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஜெ. உயிரோடு இருந்தபோது, செங்கோட்டையன் மீதான புகார் காரணமாக அவரை ஒதுக்கி வைத்திருந்தார். அவரது மறைவுக்கு பிறகு  அதிமுக உடைந்தபோது, சசிகலா செங்கோட்டையனை மீண்டும் கட்சியில் முன்னிலைப்படுத்தினார். சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க தேவையான பணிகள் செங்கோட்டையனிடம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. சசி பொதுச்செயலாளர் ஆனால், ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டி விட்டு   செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி தரப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறப்பட்ட தாக  தகவலும் உலா வந்தது.

இதன் காரணமாக அதிமுக உடைந்தபோது, செங்கோட்டையன் அமைதியாக இருந்து கட்சியின் நிலவரம் குறித்து கண்காணித்து வந்தார். சசிகலா ஜெயிலுக்கு போனதும் அதிமுகவின் நிலைமை அடியோடு மாறியது.  டிடிவின் விசுவாசியான எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இதன் காரணமாக அப்செட்டான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன்  தனி ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் நோக்கில்  அவருக்கு கல்வி அமைச்சர் பதவி கொடுத்து எடப்பாடி தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.

தொடர்ந்து உடைந்த அதிமுக அணிகள் இணைந்ததும், செங்கோட்டையனிடம் இருந்து கல்வி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, ஏற்கனவே கல்வி அமைச்சராக இருந்த பாண்டியராஜனிடம் ஒப்படைக்க  கூறப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், செங்கோட்டையன் கல்வி அமைச்சர் பதவியை தர மறுத்துவிட்டதால், பாண்டிய ராஜனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போதே அதிமுக தலைமை இணைந்தாலும் தலைகள் இணையாமல் இருப்பதாகவே கூறப்பட்டு வந்தது.

அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே அமைச்சர்  செங்கோட்டையன் நடவடிக்கைகள் தொடர்ந்து வந்தது. சக  அமைச்சரவை  சகாக்களுடன் ஒன்றிணையாமல் செங்கோட்டையன் தன்னந்தனியாகவே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுபோலவே அவரது செயல்பாடுகளும் அமைந்து வருகின்றன. அரசு மற்றும் கட்சி குறித்து வாய் திறக்க மறுத்து, கல்வித்துறை குறித்து மட்டுமே பதில் அளித்து வருகிறார்.

அமைச்சர் செங்கோட்டையன் சசிகலாவுக்கு விசுவாசமாக இருப்பதால், தற்போதைய அதிமுக அமைச்சர் களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.  இதற்கேற்றாற்போலவே தற்போது நடந்து முடிந்துள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து டிடிவி அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தல் முடிவு அதிமுகவில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. ஈரோடு பகுதி அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் செங்கோட்டையன்மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றன. அதிமுகவுக்கு செங்கோட்டையன் துரோகம் செய்து வருவாகவும், அவரின் உள்குத்து காரணமாகவே அதிமுக கூட்டுறவு சங்க தேர்தலில் தோல்வி அடைந்தது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.