Random image

துருக்கி: பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக 18 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

துருக்கியில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக 18 ஆயிரம் அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் நேற்று பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

துருக்கியில் ஆட்சியில் இருப்பவர் அதிபர் தாயீப் எர்டோகன். இவரை பதவியில் இருந்து நீக்க கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி  ராணுவ புரட்சிக்கு முயற்சி நடந்தது.

 

ராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை மக்கள் ஆதரவுடன் அதிபர் எர்டோகன் முறியடித்தார். மேலும், இந்த முயற்சியில் ஈடுபட்டதாக  1 லட்சத்து 60 ஆயிரம் பேரை சிறையில் அடைத்தார். அந்த காலகட்டத்தில் அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு, இப்போது வரை தொடர்கிறது.

அங்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் எர்டோகன் மீண்டும்  வெற்றி பெற்று பதவியை தக்க வைத்தக்கொண்டார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) அவர் பதவி ஏற்கிறார். அவருக்கு முன்பு இருந்ததை விட தற்போது கூடுதல் நிர்வாக அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் அவர் நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்வார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி, அவர்களுக்கு உதவியதாக 18 ஆயிரம் அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் நேற்று பணியில் இருந்து நீக்கினார்.  அவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் காவல்துறையை சேர்ந்தவர்கள். 199 பேர் பல்கலைக்கழக கல்விப்பணியாளர்கள்.

துருக்கியில் ஏற்கனவே இந்த விவகாரத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.