ஐஎஸ் இயக்கத்துக்காக போராடியவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புதல்! துருக்கி நடவடிக்கை

அங்காரா: ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து இஸ்லாமிய அரசுக்காக போராடி பிடிபட்ட 2 பேரை துருக்கி அரசு, அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறது.
துருக்கி ஒன்றும் ஐஎஸ் வீரர்கள் தங்குவதற்கான விடுதி அல்ல என்று துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோலயு தெரிவித்த ஒரு வாரத்துக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

சிரியாவில் துருக்கி நடத்திய தாக்குதலின் போது, 1,200 வெளி நாட்டினர் சிறைகளில் இருந்தனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 287 பேர் பிடிக்கப்பட்டனர் என்றார்.
தற்போது, அமெரிக்க மற்றும் டென்மார்க் நாட்டை சேர்ந்த தலா ஒருவரை துருக்கி அரசு நாடு கடத்தி இருக்கிறது. இந்த தகவலை உள் துறை அமைச்சர் சுலைமான் சோலயு தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவை சேர்ந்தவர், கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளின் எல்லை பகுதியில் கொண்டு போய்விடப்பட்டார். இது குறித்து அமெரிக்கா எந்த தகவலை ஒத்துக் கொள்ள மறுக்கிறது.


இவர்கள் தவிர, சிரியாவில் பிடிக்கப்பட்ட 2 ஐரிஷ் நாட்டினர், 2 ஜெர்மானியர்கள்,11 பிரான்ஸ் நாட்டினர் ஆகியோரும் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருக்க, டென் மார்க்கோ வாய் திறந்திருக்கிறது. அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் நிக் ஹக்கர்பேக் கூறுகையில், ஐஎஸ்சுக்காக போராடிய டென்மார்க் நாட்டினர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
அவர்கள் எந்த அளவுக்கு மிக விரைவாக தண்டிக்கப்பட வேண்டுமோ அவ்வளவு விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார். ஜெர்மன், நெதர்லாந்து நாட்டினரையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்ற அந்தந்த நாடுகள் துருக்கியை வலியுறுத்தி இருக்கின்றன.
இது குறித்து பேசிய ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கிறிஸ்டோபர் பர்கர், 3 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளை திருப்பி அனுப்ப துருக்கி முடிவு செய்துள்ளதாக கூறினார்.