” பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜியை சவுதி தான் கொலை செய்துள்ளது ” – ஆதாரத்தை வெளியிட்ட துருக்கி

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி சவுதியால் கொல்லப்பட்டுவிட்டார் என்று துருக்கி ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.

jamal

இதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், “எங்களுக்குக் கிடைத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி அக்டோபர் 2 ஆம் தேதி கொல்லப்பட்டிருக்கிறார். அவரைக் கொன்று அவரது உடலை சவுதி அதிகாரிகள் அழித்துள்ளனர். எங்களுக்குக் கிடைத்த அந்த வீடியோவில் உள்ள நபர்கள் அரபிக் பேசுவதை நீங்கள் கேட்கலாம். அவர்கள் ஜமாலைத் தாக்குகின்றனர். அவர்கள் அவரைக் கொடுமை செய்து கொலை செய்கின்றனர். இதில் நீங்கள் ஜமாலின் குரலைக் கேட்கலாம்” என்று கூறியுள்ளனர்.

கொலை செய்யப்பட்டதாக துருக்கியால் கூறப்படும் ஜமால் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்து குறிப்பாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர். இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்வதற்காக கடந்த வாரம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற அவர் மாயமானார்.

ஜமால் கஷோகிஜி காணாமல் போனது தொடர்பாக சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலைச் செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறி வந்த நிலையில், வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை தற்போது வெளியிட்டுள்ளது.