துருக்கி: ராணுவ புரட்சி – 60 பேர் பலி – 754 பேர் கைது

அங்காரா:

துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அரசு ஆதரவு ராணுவத்துக்கும் , புரட்சிக்காரர்களுக்கும் மோதல் நீடிப்பதால் ஆங்காங்கே வெடிகுண்டு வெடிப்பது, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதால் அந்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.

1turkye

இதுவரை 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 754 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. புரட்சிக்கு காரணமான ராணுவ தளபதி கொல்லப்பட்டதாக ஒரு தகவலும், தலைமறைவாகி விட்டார் என மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது.

புரட்சியை அடக்க   தற்காலிக ராணுவ தளபதி நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்து உள்ளது.

துருக்கியில் நடைபெற்றுள்ள ராணுவ நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது என அந்நாட்டு பிரதமர் பின்னாலி எல்டரீம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவத்தை தூண்டிவிடும் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி பிரதமர் தெரிவித்துள்ளார்.  துருக்கி ராணுவ புரட்சிக்கு    உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

துருக்கியில் சிக்கி தவிக்கும் தமிழக விளையாட்டு வீரர்கள்
துருக்கியில் சிக்கி தவிக்கும் தமிழக விளையாட்டு வீரர்கள்

விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள துருக்கி சென்றுள்ள இந்திய விளையாட்டு மாணவ, மாணவிகள் தங்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தாங்கள் டிராப்சோன் பகுதியில் உள்ள விளையாட்டு கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்தியர்கள் யாரும் துருக்கி செல்ல வேண்டாம் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.  துருக்கியில் இந்தியர்கள் பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்கவும் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.