இஸ்தான்புல்: துருக்கி நாட்டைச் சேர்ந்த மத வழிப்பாட்டுப் பிரிவு தலைவர் ஒருவருக்கு, பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் அட்னான் அக்தார். இவரின் வயது 64. அந்நாட்டின் வழிபாட்டு பிரிவு ஒன்றுக்கு தலைவராக இருந்தவர். தனது தொலைக்காட்சி சேனலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கவர்ச்சியான பெண்கள் சூழ பிரசங்கம் நடத்தி வந்தார்.

இதற்கு துருக்கியின் மதத் தலைவர்களிடமிருந்து கண்டனங்கள் குவிந்தது. இதன் தொடர்ச்சியாக அக்தார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2016ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகவும் துருக்கி அரசு இவர்மீது குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து 2018ம் ஆண்டில் அக்தார் கைது செய்யப்பட்டார்.

ஊடக கண்காணிப்புக் குழு, அக்தாரின் தொலைக்காட்சி சேனலுக்கு அபராதம் விதித்ததோடு, அவரது நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புகளுக்கும் தடை விதித்தது. அவரைச் சுற்றிலும் நிற்கும் அழகிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். 10க்கும் மேற்பட்ட தனித்தனி குற்றச்சாட்டுகள் அக்தார் மீது சுமத்தப்பட்டன.

தற்போது இந்த வழக்கில் துருக்கி நீதிமன்றம் அவருக்கு 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் அக்தார். இந்நிலையில், அவர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு 1000 தோழிகள் இருப்பதாக டிசம்பர் மாதம் அக்தார் தலைமை நீதிபதியிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.