பாட்னா: காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கு;k மசோதாவுக்கு ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பீகார் சட்டசபை முடங்கியது.

பீகார் சட்டசபையில் நிதீஷ்குமார் அரசாங்கம் அறிமுகப்படுத்திய காவல்துறை மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கும் இந்த மசோதாவுக்கு ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அவையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் கொந்தளிப்புக்கு இந்த மசோதா வழிவகுத்தது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக, அவை 5 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மசோதாவில், வாரண்ட் இல்லாமல் கைது செய்வது உள்ளிட்ட கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

பீகாரில் மோசமான நிலையில் உள்ள சட்டம் ஒழுங்கு, ஊழல், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் பேரணி சென்றது. அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் ஏராளமான தொண்டர்களுடன் அங்குள்ள காந்தி மைதானத்தின் அருகில் இருந்து சட்டசபை நோக்கி முற்றுகை போராட்டத்தை தொடங்கினர்.

அவர்களை முன்னேறவிடாமல் காவல்துறை தடுக்க அப்பகுதியில் மோதல் மூண்டது. தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். கற்கள் வீசப்பட்டதில் வாகனங்கள் சேதம் அடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் பீகாரில் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் என்ன நடந்தது? அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றார்.

ஆர்ஜேடி போராட்டம் குறித்து ஜனதா தளம் தலைவர் அஜய் அலோக் கூறியதாவது: இதுதான் ஆர்ஜேடியின் உண்மை முகம். அவர்கள் வன்முறையை அதிகளவு நம்புகிறார்கள். அதை இதுபோன்ற போராட்டங்கள் மூலமாக மக்களுக்கு உணர்த்துகிறார்கள் என்றார்.