துருக்கி: ரயில் பெட்டிகள் தடம்புரண்டதில் 10 பேர் பலி
துருக்கியில் ரயில் தடம்புரண்டதில் 10பேர் உயிரிழந்த நிலையில் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தகவலை துருக்கியின் சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. எர்டினோவில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்ற பயணிகள் ரயிலின் 5பெட்டிகள் சரிலார் கிராமம் அருகே தடம்புரண்டது.
விபத்துக்குள்ளான ரயிலில் 362 பயணிகள், 6 ரயில்வே ஊழியர்கள் இருந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சேவைகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஏர் ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக துருக்கி அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஆலோசகருமான இப்ரஹிம் கலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை டிவிட்டரில் தெரிவித்துக் கொண்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக டெகிர்டாக் ஆளுநரான மெஹ்மத் சிலான் கூறியுள்ளார்.