தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

தூத்துக்குடி:

டலில் மீன்பிடிக்க போன  தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் கரை திரும்பவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, அவர்களுடன் அவர்களது படகையும் சிறைபிடித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாகி வருவது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.

கடந்த 18ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்தோணி, ரூபிஸ்டன், வில்பிரட், விஜய் , ஆரோக்கியம், வினோத் , ரமேஷ் உள்பட 8 பேர் இதுவரை கரை திரும்பவில்லை.

அவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதால், இலங்கை கடல் எல்லை பகுதியில் அவர்கள் மீன் பிடித்ததாக கூறி  இலங்கை  கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மூலமாக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அத்துமீறிய செயல்களால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டும் மீனவர்கள்,  இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.