தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைடுக்கு எதிராக நடத்திய மக்கள் போராட்டத்தில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த  ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய், சிறுநீரக நோய், மூச்சுத்திணறல் உள்பட  பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியானார்கள். இது உலக நாடுகள் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை, சுற்றுச்சூழலுக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி யுள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணையை காலதாமதமின்றி நடத்தவும் இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.