தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காவல்துறையினரை விமர்சித்த நடிகை நிலானி கைது

குன்னூர்:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, காவல்துறையை,  காவலர் உடை அணிந்து கடுமையாக விமர்சித்த டிவி நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது, போலீசார் பொதுமக்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித் தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில், டிவி நடிகை நிலானி போலீசாரின் துப்பாக்கி சூடு குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.  சின்னத்திரைக்கான காட்சி ஒன்றில்  போலீஸ் உதவி கமிஷனர் உடை அணிந்தபடி நடித்து வந்த அவர், அந்த காட்சி முடிந்தவுடன், அதே உடையில் வீடியோவில் பேசியிருந்தார். அதில்,  இலங்கையில் என்ன நடந்ததோ அதே தான் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளது. தமிழகத்தில் போலீசார் நடத்திய துப்பக்கிச் சூட்டு சம்பவத்தின் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். போலீஸ் யூனிபார்மினை சுட்டிக்காட்டி இந்த உடையை அணிவதற்கே உடம்பு கூசுகிறது.

தமிழர்களை தீவிரவாதியாக்க முயற்சிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இது தற்செயலாக நடந்தது போன்று இல்லை. முற்றிலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது போன்று உள்ளது. இங்கு இன்னும் ஒரு ஈழம் உருவாகிவிடக் கூடாது. இன்னுமொரு பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும் பறி கொடுக்க வேண்டாம். கூடிய சீக்கிரம் இவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் வகையில் புரட்சி வெடிக்க வேண்டும் என்று பேசியிருந்தார் நிலானி.

அவரது இந்த  வீடியோ வைரலானது. இதையடுத்து அவர் மீது பாஜகவினர் வடபழனி போலீஸில் புகார் அளித்தனர். புகாரை  பெற்ற போலீசாரி சின்னத்திரை நடிகை நிலானி மீது கடந்த மாதம்  24ம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், குன்னூரில் இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.