தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 45வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேதாந்தா நிறுவனம் நடத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் கெடுவதாகவும், மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் வருதாகவும் தொடர்ந்து மக்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். இந்த ஆலையை மூட வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த கண்டன ஆர்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. தற்போது மக்கள் போராட்டம் இன்று  45வது நாளாக தொடர்கிறது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளை உடனே நிறுத்த வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையினை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள்.

இந்த போராட்டத்தில் இப்போது அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்கள் மற்றும் காமராஜ் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து கலந்துகொண்டனர். இன்று வ.உ.சி. கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளுக்காக முதல்முதலாக குரல் எழுப்பிய குமாரரெட்டியாபுரம் கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் இன்று 45வது நாளாக தங்களது தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.