தூத்துக்குடி ஆலையை மீண்டும் திறக்க கிராம மக்கள் விருப்பம்…..ஸ்டெர்லைட் சிஇஒ ராம்நாத்

சென்னை:
உள்ளூர் மக்களின் போராட்டம் காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இ ந்நிலையில் இது குறித்து அந்நிறுவன சிஇஒ ராம்நாத் சிஎன்என்&நியூஸ் 18 சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில்,‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடுவதற்கு முன்பு எங்களது கருத்தை கேட்டிருக்க வேண்டும். தூத்துக்குடி கிராம மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் காப்பர், சல்பியூரிக் ஆசிட், பாஸ்பெரிக் ஆசிட், ஸ்லாக், ஜிப்சம் போன்ற பொருட்கள் தயாரிப்பு செய்கிறோம். இதை நம்பி பல வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்களை நம்பியிருந்த வாடிக்கையாளர்கள் பலர் தங்களது சிறு நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களுடன் இறக்குமதி, ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த பெரிய நிறுவனங்களும் பாதித்துள்ளது. சல்பியூரிக் ஆசிட் உற்பத்தியில் நாங்கள் பெரிய நிறுவனம். தற்போதைய மூடலால் இதன் விலை 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது. எங்களிடம் 850 முதல் 900 ஊழியர்கள் உள்ளனர். தற்போதைக்கு அவர்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘சுற்றுசூழல் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் உள்ளது. எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது. அதனால் எங்களுக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக எவ்விதமான நோட்டீஸ்களும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போதும் நோட்டீஸ் வழங்கப்படவில்லை.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து மூடுவதற்கான உத்தரவு மட்டுமே வந்தது. அதன் பின்னர் அரசிடம் இருந்து உத்தரவு வந்தது. எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஒரு பிரச்னையை தீர்க்க போராட்டம் மட்டுமே தீர்வாகாது. தீர்வு காண நீதிமன்றங்கள் உள்ளன. சுற்றுசூழல் சட்டங்கள் உள்ளது. என்னவெல்லாம் நடந்ததோ அதெல்லாம் நடந்திருக்க கூடாது. எங்களது ஆவணங்களை எத்தகைய சோதனைக்கும் உட்படுத்த தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

‘‘மே 22 அன்று நடந்த வன்முறை சம்பவங்களில் எங்களுக்கு உடன்பாடில்லை. சமூக வலை தளங்களில் பொறுப்பற்ற செயல்கள் அதிகளவில் நடந்தது. இதை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதை அடிப்படையாக கொண்டு எங்களது சொத்துக்கு பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடினோம். எங்களுக்கு பாதுகாப்பு கேட்கும் அனைத்து உரிமையும் உள்ளது. வன்முறைக்கு முன்பு இந்த விவகாரத்தை மாநில அரசு சிறந்த முறையில் கையாண்டது. எனினும் சூழ்நிலையை அரசு முன்கூட்டியே உணர்ந்திருக்க வேண்டும்.

மீனவர்களும், கிராம மக்களும் தாங்கள் வெளிநபர்களால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளோம் என்பதை தற்போது உணர்ந்துள்ளனர். வெளி நபர்கள் சில மாதங்களாக கிராமத்திலேயே தங்கியிருந்துள்ளனர். அவர்கள் எங்களுக்கு நல்லது செய்வதாக கூறினார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வன்முறை வரை கொண்டு சென்றுவிட்டது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்’’ என்றார் ராம்நாத்.