(பைல் படம்)

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பீடித்திருந்த இறுக்கமான சூழ்நிலை தளர்ந்து தற்போது  இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள்  போராட்ட்த்தை கட்டுப்படுத்த முடியாமல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அரசு 144 தடை உத்தரவும் 27ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழலே நிலவி வந்தது. இதற்கிடையில், உலகம முழுவதும் உள்ள தமிழர்கள் ஸ்டெலைட்டுக்கு எதிராக போராடி வருகின்றனர். திமுக உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று  தூத்துக்குடி ஆட்சியர், அந்த பகுதியை சேர்ந்த வணிகர்கள், நிறுவனங்களை, தனியார் பஸ்,ஆட்டோ சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போத ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தொடங்காது என்றும், காவல்துறையினர் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்க அரசு முன்வந்துள்ளது என்றும் கூறினார்.  அப்போது ஏற்பட்ட உடன்பாடை தொடர்ந்து நேற்று மாலை ஒருசில கடைகள் திறக்கப்பட்டன.

போலீசாரின் ரோந்து பணிகளும் குறைக்கப்பட்டு, ஒரு இடங்களை தவிர மற்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.

இன்று காலை முதல் அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கத் தொடங்கி உள்ளன. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில தனியார் பேருந்துகளும் இயங்கத் தொடங்கி உள்ளன.

மக்களும் மெதுவாக வெளியே தலை காட்ட தொடங்கி உள்ளனர். ஒருசில கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன. சாலையில் வாகனங்களின் போக்குவரத்தும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சிறிது சிறிதாக மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இன்று அல்லது நாளைக்குள்  ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் வந்துவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.