ரஜினிக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம்

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக ரஜினிக்கு  விசாரணை ஆணையம் விலக்கு அளித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு மே 22ந்தேதி அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது,  காவல்துறையினர் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில்  13 பேர் பலியானார்கள். இந்த விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், 2028ம் ஆண்டு  மே மாதம் 30ந்தேதி  அங்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஆறுதல் கூறினார்.  அப்போது, இந்த வன்முறைக்கு சமூக விரோதிகளே தூத்துக்குடி காரணம் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க கோரி, தமிழகஅரசு அமைத்துள்ள ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் ரஜினிக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இதற்கு ரஜினி தனது வழக்கறிஞர் மூலம் பதில் தெரிவித்திருந்தார். அதில், தான் அங்கு வந்தால் தேவையற்ற பிரச்சினை உருவாகும் என்றும், அதனால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, விசாரணை ஆணையம் ரஜினியின் கோரிக்கையை ஏற்று, ரஜினிகாந்திடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை சீலிட்ட கவரில் அவரது  வழக்கறிஞர் மூலம் அனுப்பி உள்ளது.

https://www.patrikai.com/sterlite-gunshot-justice-aruna-jagadeesan-commission-summons-to-actor-rajinikanth/