தூத்துக்குடியை ஆளில்லா விமானங்கள் மூலம் உளவுபார்க்கும் காவல்துறை: பொதுமக்களிடையே பரபரப்பு

தூத்துக்குடி:

லவரம் நடைபெற்ற தூத்துக்குடியில், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம்  தமிழக காவல்துறை  உளவுபார்த்து வருகிறது. இது  பொதுமக்களிடையே பரபரப்பையும், பதற்றத்தையும் அதிகரித்து உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள  அண்ணாநகர், பிரையண்ட் நகர் போன்ற பகுதிகளில் காவல்துறையினரின் ஆளில்லா விமானங்கள் மேலே பறந்தபடி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

ஸ்டெர்லைட் போராட்ட வன்முறை காரணமாக 13 பேர் பலியான நிலையில், 100க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

தற்போது ஓரளவு அமைதி திரும்பி வரும் நிலையில்,  காவல்துறையினரின் வேவு விமானங்கள் தெருக்களின் மீது பறந்து செல்வது அப்பகுதி மக்களுக்கு மீண்டும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் பதற்றம் மிக்க பகுதிகளை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை ஒட்டி உள்ள அண்ணாநகர் பகுதி, மற்றும் பிரையன்ட் நகர் பகுதிகளில் இந்த டிரோன்கள் சுற்றி சுற்றி வருகின்றன.

இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று காவல்துறையினர் கூறி வந்தாலும், இந்த வேவு பார்த்தல் பொது மக்களின் சுதந்திரத்தை பறிப்பதாகவும், தங்களை அச்சுறுத்தும் வகையிலேயே காவல்துறையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது என்பதே உண்மை.