இந்தி தெரியாது…கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் டுவிட் செய்யவும்: பாஜக.வுக்கு சித்தராமையா பதிலடி

பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் முதல்வர் சித்தராமையா மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். அடுத்த கட்டமாக பகல்கோதே மாவட்டம் பாதாமி தொகுதியிலும் போட்டியிட அவர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாஜக கர்நாடகா மாநில பொறுப்பாளர் முரளிதர் ராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘கடும் முயற்சிக்கு பின்னர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியை தேர்வு செய்துள்ளார். அங்கு 2ம் இடம் தான் கிடைக்கும் நிலை இருப்பதால் இரண்டாவதாக ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்த 2 தொகுதிகள் மட்டுமின்றி கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் இல்லாத மாநிலமாக அமையவுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு சித்தராமையா டுவிட்டரில் கன்னட மொழியில் பதிலளித்துள்ளார். அதில்,‘‘எனக்கு இந்தி புரியாது. அதனால் முரளிதர ராவ் கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் பதிவுகளை வெளியிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளர்.

இது குறித்து சித்தாராமையா மேலும் கூறுகையில்,‘‘ நான் பகல்கோதே மற்றும் பிஜப்பூர் மாவட்டத்தில் இருந்து போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கட்சியின் தலைமையின் முடிவு அடிப்படையில் தான் போட்டியிடுவேன்’’ என்றார்.

காங்கிரஸ் கட்சி 218 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாதாமி தொகுதியில் தேவராஜ் பட்டீல் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.