இந்திய மீனவர்கள் 12 பேர் பாகிஸ்தானில் கைது

பாகிஸ்தான் கடற்பகுதியில் தவறுதலாக நுழைந்த இந்திய மீனவர்கள் 12 பேரைப் பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர்.

அரபிக்கடலில் பாகிஸ்தானிய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் (பிஎம்எஸ்ஏ) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பாகிஸ்தானிய கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் இருப்பது தெரியவந்ததாகவும், படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12indian

இதுதொடர்பாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறும்போது, ”மீனவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய மீனவர்கள் கராச்சியில் உள்ள டார்க் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் தங்கள் வழக்கப்படி மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் வைப்பார்கள்.

அவர்கள் மீது சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். முறையான தொழில்நுட்ப வசதி இல்லாத காரணத்தால், எல்லைகளைக் கடப்பதில் இந்திய பாகிஸ்தானிய மீனவர்களிடையே குழப்பம் ஏற்படுகிறது.

இதனால் அரபிக் கடலில் உள்ள இந்திய – பாகிஸ்தான் எல்லையைக் கடக்கும் மீனவர்களை இரு நாடுகளுமே கைது செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. கடந்த மாதம் 16 இந்திய மீனவர்களைக் கைது செய்த பிஎம்எஸ்ஏ அவர்களின் மூன்று படகுகளைப் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.